Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொறுப்பில் இருந்த போது, தொழிற்பயிற்சி அதிகார சபையின் அதிகாரியான சமந்த பிரீத்தி குமார உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு ஏற்ப, 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விசாரணைக்கு ஏற்ப, பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், ஐந்து பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அடங்குகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த பிரீத்தி குமார, நாரஹேன்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நண்பருடன் மதிய உணவிற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்தார்.
அவரது நண்பர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சமந்த பிரீத்தி குமார மட்டும் தான் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஜீப்பில் வந்த சிலர் அவரை அழைத்துச்சென்றிருந்தனர்.
பின்னர் சமந்த பிரீத்தி குமாரவின் சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விசாரணையின் போது, அந்த வலையமைப்பில் உயர் பதவி வகித்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சமந்த பிரீத்தி குமார கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அவருக்கு மேலாக, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் உள்ளவர்கள் தொடர்பில் வினவியபோது, போத்தல் ஒன்றை இரண்டாக உடைத்து சந்தேகநபர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
எவ்வாறாயினும், அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளமை நீதிமன்றில் தெரியவந்தது.