.webp)
Colombo (News 1st) இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள " பிரிக்கப்படாத இந்தியா''-வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தி வௌியிட்டுள்ளன.
இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்.
இந்த புதிய கட்டடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளதாகக் காட்டுகிறது.
இந்த சுவரோவியம் பண்டைய மௌரிய பேரரசைக் காட்டுவதாகவும் அது "மக்கள் சார்ந்த" ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிப்பதாகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரோவியத்துடன் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஓவியத்தில் அகண்ட பாரதம் தௌிவாக உள்ளதென புதிய பாராளுமன்ற திறப்புவிழா நடைபெற்ற தினத்தில் இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து, இந்த சர்ச்சை வலுப்பெற்றது.
இதேவேளை, இந்த சுவரோவியம் பற்றிய விளக்கத்தை பெறுமாறு டெல்லியில் உள்ள தனது தூதுவருக்கு பங்களாதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பங்களாதேஷ் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷஹ்ரியார் ஆலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சுவரோவியத்தின் மீது பரவலான கோபம் உள்ளதாகவும் பங்களாதேஷ் வௌிவிவகார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் பலூச்சும் சுவரோவியம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஜோஷியின் கருத்துகளால் பாகிஸ்தான் திகைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அகண்ட பாரதம்" என்ற தேவையற்ற கூற்று, இந்தியாவின் அண்டை நாடுகளின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் அடிபணியச் செய்யும், விரிவாக்க மனநிலையின் வெளிப்பாடு என பாகிஸ்தான் வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.
இந்த சுவரோவியத்திற்கு நேபாளமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழமையான ஜனநாயகத்தின் முன்மாதிரியாகக் கருதப்படும் இந்தியா ,நேபாள பகுதிகளை தனது வரைபடத்தில் வைத்து பாராளுமன்றத்தில் ஓவியத்தை தொங்கவிடுவது பொருத்தமற்றது என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் KP ஷர்மா ஒலி கூறியுள்ளார்.
ಸಂಕಲ್ಪ ಸ್ಪಷ್ಟವಾಗಿದೆ - ಅಖಂಡ ಭಾರತ ??#NewParliamentBuilding#MyParliamentMyPride pic.twitter.com/tkVtu3CCoh
— Pralhad Joshi (@JoshiPralhad) May 28, 2023