வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு

வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 06-06-2023 | 1:48 PM

Colombo (News 1st) வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்களை அண்மித்து டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அறநெறி பாடசாலைகள் நடத்தப்படும் காலப்பகுதியில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் அவ்வாறான 10 வீத இடங்கள் காணப்படுவதுடன், கொழும்பு மாவட்டத்தில் 8 வீதமான இடங்கள் நுளம்பு பரவும் வகையில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை அண்மித்த 12 வீதமான இடங்கள் நுளம்பு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

15 வீதமான நிர்மாணப்பணிகள் இடம்பெறும் பகுதிகளிலும் இவ்வாறு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.