பலியானோரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஒடிசா ரயில் விபத்து: பலியான 278 பேரில் 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்

by Bella Dalima 06-06-2023 | 5:09 PM

Odisha: இந்தியாவின் ஒடிசாவில் கடந்த  2 ஆம் திகதி இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 278 பயணிகள் உயிரிழந்தனர். 

பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்திற்குள்ளாகின. 

இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன. 

சென்னை கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்தவர்களில்  பெரும்பாலானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன. பலருக்கு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ரயிலின் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் மட்டும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடலில் எந்த காயமும் இல்லை என்பதுடன், இரத்தம் வௌியாகியிருக்கவில்லை. 

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் 40 பேரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. 
கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் தரம்புரண்டபோது, எதிர்த்திசையில் வந்த பெங்களூரு-ஹவுரா விரைவு ரயில் பயங்கரமாக மோதியது. இதன்போது, ரயில்வே மின் கம்பங்கள் சாய்ந்தன. அதில் இருந்த மின்சாரம் தாக்கியதால் தான் 40 பேர் உயிரிழந்து இருப்பதாக கருதப்படுகிறது.