கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை கோரல்

by Staff Writer 04-06-2023 | 6:28 PM

Colombo (News 1st) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணி பகுதியில் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாளை(05) நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மருதங்கேணி பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தாமதிக்காமல் தண்டிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதில் ஏதேனும் தாமதம் அல்லது தயக்கம் காணப்படுமாயின் தவறு செய்பவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் அது மேலும் தைரியத்தைத் தரும் என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.