சவுதி அரேபிய பெண்ணை மணந்தார் ஜோர்தான் இளவரசர்

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை மணந்தார் ஜோர்தான் இளவரசர்

by Bella Dalima 02-06-2023 | 4:16 PM

Jordan: ஜோர்தானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் (Rajwa Al Saif) என்பவரை வியாழன் அன்று திருமணம் செய்துகொண்டார்.

திருமண விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது.

மணமகள் ராஜ்வா அல் சைஃப்  அவருக்கென சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட வெள்ளை நிற திருமண ஆடையை அணிந்திருந்தார்.  பட்டத்து இளவரசர் ஹுசைன் இராணுவ சீருடை அணிந்திருந்தார்.

2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன் (28), ஒரு முக்கிய குடும்பத்தை சேர்ந்த ராஜ்வா அல் சைஃப் (29)-ஐ திருமணம் செய்து கொண்டார்.

சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ராணி ரானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதுமணத்தம்பதியினரின்  திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

மக்கள் கூட்டத்தை தடுக்க நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், நேற்று வெகுவிமரிசையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.