யாழ். தேவி ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுப்பு

யாழ். தேவி ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுப்பு

யாழ். தேவி ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவை முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jun, 2023 | 3:28 pm

Colombo (News 1st) அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ். தேவி ரயிலின் பயணிகள் இன்று (02) காலை அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

யாழ். தேவி ரயிலின் பயணிகள் எண்ணிக்கை கொள்ளவை விட அதிகரித்தமையால், இந்த நிலைமை ஏற்பட்டது. 

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி இன்று காலை 6.35 மணிக்கு யாழ். தேவி ரயில் பயணித்ததுடன், அதில் பயணிப்பதற்காக பாரிய அளவிலான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். 

பொசொன் தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுராதபுரத்திற்கு பயணிப்பதற்காக அநேக பயணிகள் வந்திருந்தனர். 

இந்த நிலையில், யாழ். தேவி ரயிலில் பயணிக்க முடியாது போன பயணிகளுக்காக அனுராதபுரம் நோக்கி காலை 9.30 மணிக்கு விசேட ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார். 

குருநாகலை நோக்கி பயணிக்கும் ரயில் அனுராதபுரம் நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 

பொசொன் தினத்திற்காக அனுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதி கருதி மேலதிக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது. 

இதனிடையே, இன்று முதல் அனுராதபுரம் மற்றும் கொழும்பிற்கு இடையே 12 விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 5ஆம் திகதி வரை விசேட பஸ் போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

நாட்டின் பிரதான நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச குறிப்பிட்டார். 

தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அனுராதபுரத்திற்கு வருவதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக்க ஜயசுந்தர தெரிவித்தார். 

இந்த பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்