சனி கோளின் நிலவில் நீர்: உறுதி செய்த ஜேம்ஸ் வெப்

சனி கோளின் நிலவில் நீர்: உறுதி செய்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

by Bella Dalima 01-06-2023 | 3:47 PM

Colombo (News 1st) சூரிய குடும்பத்திற்குள் பூமியைத் தவிர வேறொரு கோளின் நிலவில் நீர் இருப்பதை ஜேப்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி உறுதி செய்துள்ளது.

விண்வெளி ஆய்வுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே பூமியைத் தவிர்த்து, பிற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதைத் தேடும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில், பூமியைத் தாண்டி உள்ள சனிக்கோளின் துணைக்கோளான அதாவது அதன் நிலவு ஒன்றில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்து அனுப்பியுள்ளது.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள சனிக் கோளில் அதன் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் (Enceladus - பனிக்கட்டியிலான நிலவு) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று காணப்படுவதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளதை நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 

2005 ஆம் ஆண்டே சனிக்கோளின் நிலவுகளில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி இருந்த நிலையில், ஜேம்ஸ் வெப் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும், இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகலாம் என நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 

என்செலடஸின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் அதே நேரத்தில், நிலவின் மையப்பகுதியில், இந்த தண்ணீரை சூடாக்கும் அளவிற்கு வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

சனிக் கோளுக்கு 124 நிலவுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.​

நாசாவின் மைல்கல்லாக பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது.