Colombo (News 1st) பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டண மீளாய்வு குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(31) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாக அமைந்துள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
அதற்கமைய மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் புதிய விலை 245 ரூபாவாகும்.
இலங்கை தொழில்நுட்ப மண்ணெண்ணெய் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 270 ரூபாவென மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க கூறினார்.