ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தின் அடிப்படை வரைபு தயாரிப்பு

by Bella Dalima 31-05-2023 | 7:17 PM

Colombo (News 1st) செய்தி அறிக்கையிடலை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கும் அபராதம் விதிப்பதற்கும் ஊடக நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதற்குமான சட்டங்களைக் கொண்டு வர மீண்டும் முயற்சிக்கப்படுகிறது.

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு என்ற பெயரில் இதற்கான புதிய சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தின் அடிப்படை வரைபை தயாரித்துள்ளது.

இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பாக பாரதூரமான விடயங்கள் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபில் ஐவர் அடங்கிய ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும் பதவிகள் அடிப்படையில் இந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படவுள்ளனர்.

ஏனைய மூன்று உறுப்பினர்களையும் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு பாரதூரமான வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடிய விடயங்களும் ஆணைக்குழுவின் விடயதானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு சட்டம்,  அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஔிபரப்பு சேவைகள் முன்னெடுக்கப்படுவதை ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவே உறுதி செய்ய வேண்டியுள்ளது.

தேசிய பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்பாடாத வகையில், ஔிபரப்பு சேவைகளை பேணிச் செல்வதும் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

மக்களுக்கு உண்மையான மற்றும் சரியான தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதையும் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் அதிகாரத்தையும் இலத்திரனியல் ஔிபரப்பு சேவை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் புதிய ஆணைக்குழுவிற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமூக, கலாசார பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில், மக்கள் மத்தியில்  உளநல, ஆன்மீக பண்புகளை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழு இலத்திரனியல் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க வேண்டியுள்ளது.

இதனைத் தவிர, அனுமதிப்பத்திரமுடைய ஔிபரப்பாளர்களுடன் கலந்துரையாடி ஒழுக்கக்கோவையொன்றை தயாரிக்கும் அதிகாரமும் உத்தேச ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தலைமையிலான உப குழு ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக பிரேரித்துள்ள புதிய சட்ட வரைபில், முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசாரணைக்குழுவில் ஔிரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பதவி அடிப்படையில் உள்வாங்கப்படுவதுடன் ஊடக, சட்டத்துறையின் இரண்டு நிபுணர்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.

முறைப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பாக விசாரணை  செய்யும் அதிகாரம் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

மத, இன ரீதியிலான மோதல்களுக்கு காரணமாக அமையும், தேசிய பொருளாரத்திற்கு அழுத்தம் ஏற்படுத்தும் , தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் செயற்பாட்டை ஔிபரப்பு  அனுமதிப்பத்திரமுள்ள ஒருவர் மேற்கொண்டால், முறைப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் விசாரணையை ஆரம்பிக்கும் அதிகாரம் விசாரணைக் குழுவிற்கு வழங்கப்படுகிறது. 

இவ்வாறான விசாரணையொன்றின் போது குழுவினால் கோரப்படுகின்ற எந்தவொரு ஆவணத்தையும் வாய் மூல விளக்கத்தையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்கு ஔிபரப்பாளர்கள் இந்த சட்டத்தினால் வற்புறுத்தப்படுவது மற்றுமொரு பாரதூரமான விடயமாகும்.

நீதவான் ஒருவரது தேடுதல் கட்டளைக்கு அமைய அலுவலக நேரத்தில் ஔிபரப்பு சேவைக்கு சொந்தமான எந்தவொரு வளாகத்திற்குள்ளும் பிரவேசித்து அனைத்து ஔி-ஒலிப் பதிவுகள், ஆவணங்களை கைப்பற்றுவதற்கான அதிகாரத்தை விசாரணைக்குழுவிற்கு வழங்க வேண்டும் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, இலத்திரனியல் ஊடக அனுமதிப் பத்திரத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்வதற்கு, தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கான இயலுமை ஔிரப்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

ஔிரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டத்தின் ஏதேனும் ஒரு சரத்தை மீறுவதற்கு மேலதிகமாக தேசிய பாதுகாப்பிற்கு, தேசிய பொருளாதாரத்திற்கு இன, மத நல்லிணக்கத்திற்கு அழுத்தம் ஏற்படுவதாக அனுமானிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இலத்திரனியல் ஊடக அனுமதிப் பத்திரம் தொடர்பில் தீர்மானிக்கும் உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கவுள்ளது.

ஆணைக்குழுவின் உத்தரவுகள் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணையின் பின்னர் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது  குறித்த இரண்டையும் விதிப்பதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கும் புதிய ஆவணத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே மேன்முறையீடு செய்ய முடியும்.

இந்த ஆவணத்தில் ஔிபரப்பு, ஒலிபரப்பு சேவை விநியோகத்தர், அனுமதிப் பத்திரம்,  அனுமதிப்பத்திரமுடையவர் என்ற விடயங்களுக்கான பொருட்கோடல்கள் இடம்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.