.webp)
Colombo (News 1st) குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான IPL இறுதிப் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ், 5 ஆவது தடவையாக கிண்ணத்தை சுவீகரித்தது.
போட்டியின் கடைசி இரு பந்துகளில் விளாசிய சிக்ஸர் மற்றும் பெளன்ட்ரியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றியை தன்வசப்படுத்தியது.
மழை காரணமாக நேற்று முன்தினம்(28) நடைபெறவிருந்த போட்டி நேற்று(29) வரை பிற்போடப்பட்டிருந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷுப்மன் கில் 19 பந்துகளில் 07 பெளன்ட்ரி உட்பட 39 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி மிகக்குறுகிய நேரத்திற்குள் ஸ்ட்ப்ம் செய்து ஷூப்மன் கில்லை வீழ்த்தினார்.
அவரை தொடர்ந்து விர்திமான் சகா - சாய் சுதர்சன் ஜோடியும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.
சகா 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடியதுடன், சுதர்ஷன் 47 பந்துகளில் 96 ஓட்டங்களை பெற்று வௌியேறினார்.
இதில் 08 பௌன்ட்ரிகளும் 06 சிக்ஸர்களும் அடங்குகின்றன.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது.
ஹர்திக் பாண்டியா 21 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் சார்பில் மதீஷ பத்திரன 2 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் ஆகியோர தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 215 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட சென்னை அணி களமிறங்கிய போது மழை குறுக்கிட்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருதுராஜ் 3 பந்துகளில் 4 ஓட்டங்களை எடுத்த நிலையில், மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், மழை நின்றதை அடுத்து நள்ளிரவு 12.10 அளவில் மீண்டும் ஆட்டம் ஆரம்பித்தது.
இதன்போது சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ஓட்டங்களுடனும் கொன்வே 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ரஹானே 27 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்ததுடன், அம்பத்தி ராயுடு 19 ஓட்டங்களை எடுத்தார்.
ராயுடு ஆட்டமிழந்ததை அடுத்து, அணித்தலைவர் டோனி களமிறங்கினார்.
12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் தோனி ஓட்டமேதும் எடுக்காது வௌியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடியது.
கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.
இறுதி இரு பந்துகளில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் ஜடேஜா சிக்ஸர் ஒன்றை விளாசினார்.
இறுதி பந்தில் ஜடேஜா பெளன்ட்ரியை விளாச சென்னை அணி 05 ஆவது தடவையாக வெற்றியை சுவைத்தது.