பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்ட தலவாக்கலை மற்றும் நோர்வூட் உப பிரதேச செயலகங்கள்

by Staff Writer 29-05-2023 | 4:01 PM

Colombo (News 1st) தலவாக்கலை மற்றும் நோர்வூட் உப பிரதேச செயலகங்கள் இன்று(29) பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு பதிலாக உப பிரதேச செயலகங்களே ஸ்தாபிக்கப்பட்டன.

இந்நிலையில், தலவாக்கலை உப செயலகம் இன்று(29) பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், மாவட்ட செயலாளர் நந்தன கலபொட,  பிரதேச செயலாளர் தனன் சூரிய மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து தலவாக்கலை பிரதேச செயலாளர் பதவியை சசிபிரபா சுபாசினி பிரேமசிங்க உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இதேவேளை, நோர்வூட் உப பிரதேச செயலகம் இன்று(29) பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா ருவணிகமகே நோர்வூட் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.