இந்தியாவின் புதிய பாராளுமன்றம் திறந்து வைப்பு

by Staff Writer 28-05-2023 | 6:17 PM

Colombo (News 1st) இந்தியாவில் புதிய பாராளுமன்றக் கட்டடம் இன்று(28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆதீனங்களால் கையளிக்கப்பட்ட புனித செங்கோலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்றத்தில் நிறுவியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழா புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று(28) நடைபெற்றது. 

விழாவின் ஆரம்பமாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டதுடன் இதில் பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, புனித செங்கோலை நிறுவும் நிகழ்வு ஆரம்பமானது.

விழா மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. 

திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது. 

அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்ததுடன் புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி வீழ்ந்து வணங்கினார்.

அதையடுத்து, வேத மந்திரங்கள் ஓத, தேவாரம் பாட, மங்கள இசை இசைக்க தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், பேரூர் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் புனித செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்கள். 

மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். 

இதையடுத்து, புதிய பாராளுமன்ற கட்டடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 

இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.

இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட  96 ஆண்டுகள் பழைமையான பழைய பாராளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக 3 வருடங்களில் புதிய பாராளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றம் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வௌியிட்டுள்ளன.

4 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

64,500 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட புதிய பாராளுமன்றம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என 3 வாயில்களைக் கொண்டுள்ளது. 

பாராளுமன்ற  மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும் மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளதுடன் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் போது மக்களவையில் 1280 பேர் அமரக்கூடிய வசதி காணப்படுகிறது.