AI தொழில்நுட்பம் துணையாக மாற வாய்ப்பு?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களுக்கு துணையாக மாற வாய்ப்புள்ளது: நிபுணர்கள் தெரிவிப்பு

by Bella Dalima 27-05-2023 | 5:38 PM

Colombo (News 1st) Artificial intelligence - AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது வேலையிழப்புகளுக்கு காரணமாகும் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் அதே வேளையில்,  மனிதர்களின் தனிப்பட்ட துணையாக அது மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் தொழில்நுட்பம் தொடா்ந்து மேம்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

அவற்றுள் மனிதா்களைப் போலவே இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால், பலர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக வேலையிழப்பு ஏற்படும் அபாயமானது தொழிற்புரட்சி காலத்தில் இருந்தே காணப்படுவதாக தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், வெகு சிலா் மட்டுமே அதனால் பாதிக்கப்படுவா் எனவும் செயற்கை தொழில்நுட்பமானது மனிதா்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

மனிதர்களின் வாழ்க்கை முறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எளிமைப்படுத்தும். பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் அறிவியல்-தொழில்நுட்ப பாடப் பிரிவு சாா்ந்த தொழிலாளா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலையிழப்பிற்கு பெரிய அளவில் வழிகோலாது. மாறாக, மக்களின் பணிச்சுமையை அது பெருமளவில் குறைக்கும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அதிக தரவுகள் தேவைப்படும் என்பதால், அவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இணையவழி குற்றச்செயல்களும் மற்றொரு சவாலாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு சாா்ந்த தளத்தை சிலா் ஊடுருவி தரவுகளைத் திருட வாய்ப்புள்ளது. இதுபோன்ற அபாயங்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக, தரவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

என தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளனர்.