க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி; வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

by Bella Dalima 27-05-2023 | 6:53 PM

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ளது. 

6 மாதங்களின் பின்னர்  நடைபெறும் பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள் எதிர்கொள்ளவுள்ளனர். 

கொரோனா நெருக்கடி - பொருளதார கஷ்டத்திற்கு மத்தியில் மாணவர்கள்  இதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையே எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான  வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியது. பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு  விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு  இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வார இறுதி நாட்களில் பரீட்சை நடைபெறுகின்ற போது, வார நாட்களில் முன்னெடுப்பது போன்று  ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது