திப்பு சுல்தானின் வாள் $ 17.4 மில்லியனுக்கு ஏலம்

லண்டனில் திப்பு சுல்தானின் போர் வாள் 17.4 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை

by Bella Dalima 26-05-2023 | 4:45 PM

London: மைசூா் மன்னா் திப்பு சுல்தானின் போா் வாள் லண்டன் அருங்காட்சியகத்தில் 17.4 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்ட தொகையை விட 7 மடங்கு அதிகமாக ஏலத்தில் எடுக்கப்பட்டு, இந்திய வரலாற்றுப் பொருட்களில் அதிக ஏல விற்பனைத் தொகையில் சாதனை படைத்துள்ளது.

இது தொடா்பாக Bonhams ஏல நிறுவனத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இந்திய கலை பிரிவின் தலைவரும், இந்த ஏலத்தை நடத்தியவருமான ஒலிவா் வைட் (Oliver White) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‘மைசூரின் புலி என அறியப்படும் மன்னா் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது அறையிலிருந்து எடுக்கப்பட்ட போா் வாள், அவரது அனைத்து விதமான ஆயுதங்களிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. 1782 முதல் 1799-ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் சிறந்த எஃகால் தயாரிக்கப்பட்டு கைப்பிடியில் ‘மன்னரின் வாள்’ என தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு ஆங்கிலேயா் படையின் மேஜா் ஜெனரல் David Baird-இன் வீரத்தை மெச்சி பரிசாக வழங்கப்பட்டது’ 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரமாக பாதுகாக்கப்பட்டு ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த வாளை வாங்க தொலைபேசியில் இருவரும், நேரடி ஏலத்தில் பங்கேற்றவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதாக இஸ்லாமிய, இந்திய கலை பிரிவைச் சோ்ந்த Nima Sagharchi தெரிவித்துள்ளார்.

1799-இல் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது ஸ்ரீரங்கபட்டினம் அரண்மனையில் இருந்து பல்வேறு பொருட்கள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றில் எப்போதும் அவரது படுக்கையிலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள இந்த வாளும், இரண்டு துப்பாக்கிகளும் கிடைத்தன என்றும் Bonhams ஏல விற்பனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.