கைதான 21 மாணவர்களுக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

ஆசிரியர் மீது தாக்குதல்: கைதான 21 மாணவர்களுக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

by Bella Dalima 26-05-2023 | 5:43 PM

Colombo (News 1st) புத்தளம் - தில்லையடியில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதான 21 மாணவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் 21 மாணவர்களுக்கும் இன்று (26) முற்பகல் பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நீதவான் மிஹில் சத்ருசிங்க முன்னிலையில்  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல மாணவர்களுக்கு அனுமதி வழக்கப்பட்டது.

அத்துடன், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பின்னர் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி மாணவர்கள் கையொப்பம் இடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிணை நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், அல்லது வேறு குற்றச்செயல்களுடன் குறித்த மாணவர்கள் தொடர்புபடுவார்களாயின், பிணை இரத்து செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என நீதவான் நிபந்தனை விதித்துள்ளார்.

தில்லையடியில் உள்ள பாடசாலையில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டது. 

சில மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.