கேன்ஸ் விழாவில் பெண்ணின் செயலால் பரபரப்பு

கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் கொடியில் ஆடை அணிந்து வந்த பெண்ணின் செயலால் பரபரப்பு

by Bella Dalima 23-05-2023 | 3:58 PM

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உக்ரைன் கொடியின் நிறத்தில் ஆடையணிந்து வந்த பெண் ஒருவர் தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்து சிவப்பு நிற திரவத்தை தன் மீது ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது.

இதில் நேற்றிரவு பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. இப்படத்தைக் காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

அப்போது உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் - நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவப்பு நிற திரவத்தை உடலில் ஊற்றிக்கொண்டு கோஷமிட்டார். அவரது ஆடை முழுவதும் இரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் சற்று நேரத்திற்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.

உக்ரைனில் நிலவும் சூழலை உலக நாடுகளுக்கு காண்பிக்கவே அவ்வாறு செய்ததாக அப்பெண் தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில், தனது ஆடைகளைக் களைந்து பெண் ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ரஷ்ய பிரதிநிதிகள் மற்றும் திரைப்பட நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.