.webp)
Mumbai: இந்தி நடிகரும் மாடலுமான ஆதித்ய சிங் ராஜ்புத் (33) உயிரிழந்தார்.
ஆதித்ய சிங் ராஜ்புத் மும்பை - அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 11 ஆவது மாடியில் வசித்து வந்தார்.
நடிகர் ஆதித்ய சிங், ஆதி கிங், மம் அன்ட் டாட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜ்புத்னா, கோட்ரெட், ஏ ஹே யாஷிகி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (22) நண்பகல் நடிகரைத் தேடி அவரது நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நண்பர் வெகுநேரமாக தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. எனவே அவர் மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, குளியலறையில் நடிகர் ஆதித்ய சிங் மூச்சுப்பேச்சின்றிக் கிடந்தார். உடனடியாக நண்பர், கட்டிட காவலாளி உதவியுடன் நடிகரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும், அங்கு நடிகரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
ஆதித்ய சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.