SLC தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு

by Bella Dalima 20-05-2023 | 7:40 PM

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.

2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட்டது.

இதற்கமைய, இன்றைய தினம் 06 பதவி நிலைகளுக்கான அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னாள் தலைவர் ஷம்மி சில்வாவின் தரப்பினர் மாத்திரம் இம்முறை வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையினால், போட்டியின்றி வெற்றியீட்டும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிட்டியது.

இதற்கமைய, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டார். அவர் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்படும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னாள் செயலாளர் மொஹான் டி சில்வா, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொருளாளராக முன்னாள் உப பொருளாளர் சுஜீவ கொடலியத்த எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் அதனை வாபஸ் பெற்றமையினால், உப பொருளாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதுடன் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் சட்டத்திற்கமைய, 7 ஆம் சரத்தின் முதலாவது பிரிவின் கீழ் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர்களாக ரவின் விக்ரமரத்ன மற்றும் ஜயந்த தர்மதாஸ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் உப செயலாளர் கிரிஷாந்த கப்புவத்த, செயலாளராக தெரிவானார்.