பாண் தயாரிக்கும் போட்டியில் இலங்கையருக்கு முதலிடம்

பிரான்ஸில் நடைபெற்ற பாண் தயாரிக்கும் போட்டியில் இலங்கையரான தர்ஷன் செல்வராஜா முதலிடம்

by Bella Dalima 16-05-2023 | 3:10 PM

Colombo (News 1st) இலங்கையை சேர்ந்த பேக்கரி உற்பத்திப் பொருட்களை செய்பவரான தர்ஷன் செல்வராஜா (37)  பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற போட்டி ஒன்றில் முதல் இடத்தைப் பிடித்து அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளார். 

30 ஆவது ஆண்டாக நடைபெற்ற 'Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris' எனும் போட்டியில்  baguettes எனப்படும் பாணை தயாரித்து முதல் இடத்தை அவர் பிடித்துள்ளார். 

அதற்காக அவருக்கு 4000 யூரோக்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளதுடன், பிரான்ஸ் அதிபரின்  Élysée மாளிகைக்கு ஒரு வருட காலத்திற்கு குறித்த பாணை விநியோகிக்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளார். 

அவர் 15 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவால் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

175 பேரின் பாண் தயாரிப்புகளை நடுவர் குழு கண்களைக் கட்டிக்கொண்டு சுவையை பரிசோதித்து வெற்றியாளரை அறிவித்துள்ளனர். 

Grand Prix de la Baguette de Traditional Francaise de la Ville De Paris எனும் இந்தப் போட்டியானது பாரிஸில் இடம்பெறும் மிகவும் மதிப்பு மிக்க போட்டியாகக் கருதப்படுகிறது. 

தர்ஷன் செல்வராஜா ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக இலங்கையில் இருந்து பிரான்ஸிற்கு சென்றுள்ளார். 
 
சிறந்த பாண் தயாரிப்பின் இரகசியம் என்னவென அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, சிறந்த மாவும் நல்ல செயன்முறையும் அந்த இரகசியம் என பதில் அளித்துள்ளார். 

“நாங்கள் வெளிநாட்டவர்கள் என்பதாலும், பாரம்பரிய பிரஞ்சு பாண் தயாரிப்பதைக் கற்றுக்கொள்ளவே இங்கு வந்ததாலும் நான் வென்றி பெற்றபோது அழுதுவிட்டேன். பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி. எனது பாண் அன்பு கலந்து தயாரிக்கப்படுவது. நான் எப்போதும் சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் அதனை தயாரிக்கிறேன்,''

என தர்ஷன் செல்வராஜா AFP-க்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார். 

2009 ஆம் ஆண்டு முதல் அவர் இந்த பாண் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், இரண்டு வருடங்களுக்கு முன்பு  'Au Levain des Pyrénées' எனும் பெயரில் சொந்த வர்த்தக நிலையத்தை ஆரம்பித்துள்ளார். 
 
இந்த போட்டியில் பங்கேற்ற ஒவ்வொருவரும்  55 முதல் 70 சென்டிமீட்டர் வரையிலான 250 முதல் 300 கிராம் எடையுள்ள பாணை ஒரு கிலோ மாவில் 18 கிராம் உப்பு கலந்து தயாரிக்க வேண்டும். 

பாணின் தோற்றம், தயாரிப்பு, வாசனை, சுவை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு சிறந்த பாணை நடுவர் குழு தெரிவு செய்யும்.