3D தொழில்நுட்பத்தில் செயற்கை மண்டை ஓடு

3D தொழில்நுட்பத்தில் செயற்கை மண்டை ஓடு: நியூரோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சாதனை

by Bella Dalima 25-04-2023 | 3:14 PM

Colombo (News 1st) தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3D தொழில்நுட்ப உதவியுடன் நியூரோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (Neuroplastic Surgery) செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் (20), ஏசி மெக்கானிக் (29), தச்சுத் தொழிலாளி (45) ஆகியோர் வெவ்வேறு அனர்த்தங்களில் தலையில் அடிபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். 

அவர்களது தலைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் மூளையில் அழுத்தம் அதிகமாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

மூன்று பேருக்கும் 3D தொழில்நுட்பத்திலான நரம்பியல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Neuroplastic Surgery) செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

முதல்கட்டமாக, உயிர் காக்கும் நடவடிக்கையாக, 3 பேரின் தலையிலும் ஒரு பக்க மண்டை ஓட்டை அகற்றி, இரத்தக் கசிவை சரிசெய்தனர். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அகற்றப்பட்ட மண்டை ஓட்டுக்கு பதிலாக செயற்கையான மண்டை ஓட்டை வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக, அவர்களது தலையை 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கி, அகற்றப்பட்ட மண்டை ஓட்டால் எவ்வளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பது துல்லியமாகக் கணக்கிட்டு, அதன்மூலம் டைட்டானியம் பொருள் மூலம் செயற்கையாக மண்டை ஓடு உருவாக்கப்பட்டு, 3 பேருக்கும் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பிறகு, 3 பேரும் நலமுடன் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

3D தொழில்நுட்பம் இல்லாமலும் இந்த சிகிச்சையை செய்யலாம். அப்படி செய்தால் முழுமையான வடிவம் வராது. சற்று மேடு, பள்ளம் இருக்கும். அறுவை சிகிச்சை செய்ததற்கான தழும்பும் தெரியும். ஆனால், இவர்கள் 3 பேருக்கும் தலையில் தழும்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Source: The Hindu