கறுப்புக் கொடி, பதாதைகளை காட்சிப்படுத்த தடை

வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி, பதாதைகளை காட்சிப்படுத்த தடை

by Bella Dalima 01-04-2023 | 7:08 PM

Colombo (News 1st) வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,  பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை விதித்து  சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக் கொடியை பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை  ஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் பணிக்கு இதனூடாக இடையூறு ஏற்படும் எனவும்  சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைப்புகளின் வளாகத்தினுள் கறுப்புக் கொடி ஏற்றுவதையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதையும் தவிர்க்குமாறு குறிப்பிட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சுற்றுநிருபத்தினூடாக  தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இதனிடையே, தங்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு அளித்தால், கறுப்புக் கொடிகளை காட்சிப்படுத்த மாட்டோம் என அரச மற்றும் அரச தனியார் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

 

ஏனைய செய்திகள்