கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பெட்ரோலிய தொழிற்சங்கத் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்

by Staff Writer 01-04-2023 | 7:34 PM

Colombo (News 1st) கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெட்ரோலிய தொழிற்சங்கத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்தனர். 

கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஸ்ரீ லங்கா சுதந்திர ஊழியர் சங்கம், ஸ்ரீ லங்கா பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெட்ரோலியக் கிளையின் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட, அண்மையில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பெட்ரோலிய தொழிற்சங்கத் தலைவர்கள் 20 பேர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியதாக பெட்ரோலிய சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் எதிர்வரும் சில தினங்களில் சந்தித்து, தற்போது தமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தௌிவுபடுத்தவுள்ளதாக பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் கூறினர். 

இதனிடையே, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட 20 ஊழியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

எரிபொருள் விநியோக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தொழிற்சங்க பிரதிநிதிகளை கட்டாய விடுமுறையில் அனுப்ப பெட்ரோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.