வௌிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சிக்கல்

வௌிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவதில் தொடர்ந்தும் நெருக்கடி: கடன் வழங்குநர்களுக்கு இலங்கை அறிவிப்பு

by Bella Dalima 31-03-2023 | 2:51 PM

Colombo (News 1st)  சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து கடன் கிடைத்துள்ள போதிலும், வௌிநாட்டுக் கடன்களை திருப்பி செலுத்துவதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக இலங்கை அதிகாரிகள் கடன் வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களுடன் நேற்று (30) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது தௌிவுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்குள், குறிப்பிடத்தக்க அளவு வௌிநாட்டு நாணய நெருக்கடியை சந்தித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையை சரி செய்வதற்கு மேலும் கடனைப் பெற்றால், கடன் நிலையை முறையாக பேண முடியாது போகும் என இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதனால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் கடன் வழங்குநர்களிடம் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வௌிநாட்டுக் கடன்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.