சரமாரி தாக்குதல் நடத்திய நால்வருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் பாடசாலை விளையாட்டுப் போட்டியின் போது சரமாரி தாக்குதல்: நால்வருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 31-03-2023 | 6:50 PM

Colombo (News 1st) கிளிநொச்சி - சாந்தபுரத்தில் உள்ள பாடசாலையொன்றில் நேற்று (30) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, நேற்று பிற்பகல்  திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை முன்பாக, பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐவர் தொடர்புபட்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை கைது செய்யும் நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தியபோது, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், மூவர் சிகிச்சைகளின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.