முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு

by Bella Dalima 29-03-2023 | 4:51 PM

Colombo (News 1st) முச்சக்கர வண்டி கட்டணம் நாளை (30) முதல் குறைக்கப்படவுள்ளது.

போக்குவரத்துக் கட்டணத்தை இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து 80 ரூபா வரை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். 

மீட்டர் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் அறவிடும் முச்சக்கர வண்டிகள் பல்வேறு வகையான கட்டணங்களை அறவிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

முதல் கிலோமீட்டருக்கு 120 ரூபா, அதனைத் தொடர்ந்து 100 ரூபா எனும் அடிப்படையிலும், அனைத்து கிலோமீட்டருக்கும் 100 ரூபா எனும் அடிப்படையிலும், முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபா அதனைத் தொடர்ந்து 90 ரூபா எனும் அடிப்படையிலும், பல்வேறு வகையான கட்டணங்கள் அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

எனினும், எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைய முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபா, அதனைத் தொடர்ந்து 80 ரூபா எனும் அடிப்படையில் விலையை நிர்ணயித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார். 

மேலும் தமக்கு எரிபொருள் கோட்டாவின் அடிப்படையில், 5 லிட்டர் மாத்திரமே வழங்கப்படுவதாகவும், அதற்கு மேலதிகமான அளவை அதிக விலைக்கே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எரிபொருள் விலையைக் குறைத்தமையைப் போன்றே, எரிபொருள் கோட்டாவையும் அதிகரிக்க வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.