இஸ்ரேல் பிரதமரின் அறிவித்தல்

இஸ்ரேலில் மக்கள் போராட்டம்: நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை இடைநிறுத்திய பிரதமர் பெஞ்சமின்

by Staff Writer 28-03-2023 | 10:05 AM

Colombo (News 1st) மக்களிடையே பிளவு ஏற்படுவதை தடுப்பதற்காக நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை இடைநிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சட்ட மறுசீரமைப்பிற்கு எதிராக இஸ்ரேலில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம்  நீதிமன்றத் தீர்ப்புகளை பெரும்பான்மையுடன் புறக்கணிக்க பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஜனவரி 4ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டதில் இருந்து இஸ்ரேலின் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ,  நீதி அமைப்பை மாற்றியமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கு எதிராகப் பேசிய பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தார்.

இதனை அடுத்து இஸ்ரேலில் எதிர்ப்புகள் வலுப்பெற்றன.

இந்த நிலையில் சீர்திருத்தங்களை தாமதப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர்  நெதன்யாஹூ கூறியதை அடுத்து  தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த நாடளாவிய வேலைநிறுத்தம் மீளப்பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.