பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு: எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு

பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு: எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு

எழுத்தாளர் Bella Dalima

28 Mar, 2023 | 7:15 pm

Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொலன்னாவை முனையத்திலிருந்து எரிபொருள் விநியோகம் இன்று நண்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தங்களின் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய பொது சேவை சங்கம் இன்று முற்பகல் அறிவித்தது.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக நேற்று முதல் பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துள்ளனர். 

நிறைவேற்று உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துள்ளன.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் அதிக வருமானம் கொண்ட சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 04 சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இதனைத் தவிர வடக்கு, கிழக்கிலுள்ள இந்திய IOC நிறுவனங்களுக்கான எண்ணெய் விநியோகத்தை முழுமையாக நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரமொன்றுக்கு அமைய, மூன்று வௌிநாட்டு நிறுவனங்கள் இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்க அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

இந்த அனுமதியின் பிரகாரம், சீனாவின் Sinopec, அவுஸ்திரேலியாவின் United Petroleum, அமெரிக்காவின் RM Parks ஆகிய மூன்று நிறுவனங்கள் இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்புக்கள் என்ன?

தகுந்த நிறுவனங்களை தெரிவு செய்வதற்கான அபிப்பிராயத்தை கேட்டறியும் வகையில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சு விடுத்த அறிவித்தலுக்கு அமைய தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பெட்ரோலிய உற்பத்திகளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாகவுள்ள எரிபொருள் நிலையங்கள் மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களை பயன்படுத்தி வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட முடியும்.

பெட்ரோலிய மொத்த களஞ்சிய நிறுவனத்தின் அடிப்படை வசதிகளை கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கவுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பிரசுரித்த அறிவித்தலுக்கு அமைய, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய, புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள், புதிய களஞ்சிய முனையங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மூன்று நிறுவனங்களுக்கும் தற்போது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் விற்பனை முகவர்கள் நடத்திச் செல்கின்ற 450 எரிபொருள் நிலையங்களை ஒதுக்கிக்கொடுக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் புதிதாக தலா 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்கவும் அனுமதி கிடைக்கவுள்ளது.

குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ள அனுமதிப்பத்திரம் ஊடாக, 20 வருடங்களுக்கு இலங்கையில் பெட்ரோலிய உற்பத்திகளை மேற்கொள்ளவும், களஞ்சியப்படுத்தவும் விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதியளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Lanka IOC நிறுவனமும் அடுத்த மாதம் புதிதாக 34 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்கவுள்ளது.

எவ்வித வௌிப்படைத்தன்மையும் இன்றி முன்னெடுக்கப்படுகின்ற இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்