தொடரும் பெட்ரோலியத்துறை ஊழியர்களின் போராட்டம்

பெட்ரோலியத்துறையை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிரான சத்தியாக்கிரகம் தொடர்கிறது

by Staff Writer 28-03-2023 | 9:13 AM

Colombo (News 1st) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும்(28) தொடர்கின்றது.

தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம்(28) கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சேவை சங்கத்தின் பெட்ரோலிய பிரிவிற்கான தலைவர் ஜகத் விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்ககு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை, மிகவும் கவலைக்குரிய விடயமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சீனாவின் சினொபெக்(Sinopak), அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம்(United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ்(R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

இந்த 03 நிறுவனங்களுக்கும் தற்போது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் விற்பனை முகவர்கள் நடத்திச் செல்கின்ற தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வீதம் ஒதுக்கப்படவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் புதிதாக தலா 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்கவும் அனுமதி கிடைக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறித்த 03 நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ள அனுமதிப்பத்திரத்தினூடாக 20 வருடங்களுக்கு இலங்கையில் பெட்ரோலிய உற்பத்திகளை மேற்கொள்ளவும் களஞ்சியப்படுத்தவும் விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதியளிக்கப்படவுள்ளது.