இலங்கை அணிக்கு அபராதம்

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு அபராதம்

by Bella Dalima 28-03-2023 | 5:58 PM

Colombo (News 1st) நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இலங்கை அணிக்கு ஒரு தண்டனைப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சுப்பர் லீக் தொடரின் ஓர் அங்கமாக நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் வெற்றியீட்டினால் மாத்திரமே இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நேரடி வாய்ப்பை இலங்கை அணியால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறான பின்புலத்திலேயே ஒக்லண்டில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், உரிய நேரத்தில் பந்து வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தண்டனைப் புள்ளி இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ளமையால், சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணிக்கு ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 81 புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று சிம்பாப்வேயின் அனுசரணையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.