பாராளுமன்ற அமர்வை மட்டுப்படுத்த தீர்மானம்

அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற அமர்வை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 27-03-2023 | 6:41 PM

Colombo (News 1st) அடுத்த வாரத்திற்குரிய பாராளுமன்ற அமர்வு ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மாத்திரம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவிருந்த பாராளுமன்றத்தின் இரண்டாவது வார அமர்வினை ஏப்ரல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை முன்னெடுக்கவுள்ளதாக  பாராளுமன்றத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.