.webp)
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள், ஆய்வுக்கூட பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸ் உள்ளிட்ட சில வைரஸ் தொடர்பில் இதன்போது ஆய்வு செய்யப்படவுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டார்.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலும், கால்நடை மருத்துவ ஆய்வுக்கூடத்திலும் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
நான்கு நாட்களுக்குள் இந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, முட்டை இறக்குமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகளை பேக்கரிகளில் மாத்திரமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கால்நடை வைத்தியர் ஹேமாலி கொத்தலாவல கூறினார்.
சுகாதார அமைச்சு மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள், இதனை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முட்டைகள் பயன்படுத்தப்படும் இடங்களின் முகவரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஹேமாலி கொத்தலாவல சுட்டிக்காட்டினார்.
அத்துடன் முட்டைகளின் கழிவுகளை அகற்றுவதற்குரிய வழிகாட்டல்கள் பேக்கரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹேமாலி கொத்தலாவல மேலும் தெரிவித்தார்.