உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதம்

எழுத்தாளர் Bella Dalima

23 Mar, 2023 | 4:37 pm

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திகதிகளில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் நடத்தப்படவிருந்த தபால் மூல வாக்களிப்பை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பின் போது அரசியல் கட்சிகளின் செயலாளர்களால் நான்கு  அம்ச யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என்பதால், உறுதியான திகதி ஒன்றை அறிவித்து தேர்தலை ஒத்திவைத்தல், வாக்களிப்பிற்கு தேவையான வசதிகளையும் பின்புலத்தையும் உறுதி செய்துகொண்டதன் பின்னர் தேர்தல் தினத்தை அறிவித்தல் என்பன அந்த யோசனைகளில் அடங்கும். 

எனினும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  சட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தேர்தலை  ஒத்திவைக்க முடியாது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பில் அரசியலமைப்பு பேரவை, நிறைவேற்றுத்துறை மற்றும் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் சுமூகமாக கலந்துரையாடி ஏற்படுத்திக்கொள்ளப்படும் இணக்கப்பாட்டிற்கு அமைய, தேர்தல் தினத்தை அறிவிக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து, ஏற்கனவே திட்டமிட்ட திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்தாதிருப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்