IMF ஆவணம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு; மீளாய்வின் போதே மாற்றங்கள் குறித்து ஆராயலாம் என ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 22-03-2023 | 7:06 PM

Colombo (News 1st) தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள கொள்கைகளில் இருந்து, விலகிச் செல்வதற்கான இயலுமை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளை, இன்று சபையில் சமர்ப்பித்த ஜனாதிபதி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சர்வதேச நாணய நிதியத்துடன் குறித்த செயற்றிட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக கூறினார். 

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உரிய நிதி ஒழுக்கத்துடன் பொருளாதார மறுசீரமைப்பை முன்னோக்கி கொண்டு சென்றால், நாட்டின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார அடிப்படையை உருவாக்க முடியும் எனவும் அந்த பாதையில் இருந்த விடுபட்டால்,  கடந்த ஏப்ரல் மாதம் இருந்த நிலைமையை விடவும் மோசமான நிலைக்கு முழு நாடும் தள்ளப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எதிர்காலத் திட்டங்கள் மற்றும் இலக்குகளையும் ஜனாதிபதி தனது உரையில் வௌிக்கொணர்ந்தார்.

- 2025 ஆம் ஆண்டுக்குள் முதன்மை பற்றாக்குறையை மொத்த தேசிய உற்பத்தியில் 2.3% ஆக குறைப்பது.

- 2026 ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் 15% ஆக உயர்த்துவது

- VATக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளை படிப்படியாகக் குறைத்து, அதனை திரும்ப செலுத்துவதை துரிதப்படுத்துதல்,   SVAT  முறையை இரத்து செய்தல்

- 2025 இல் குறைந்தபட்ச வரி விலக்குடன், சொத்து வரி முறைக்கு பதிலாக செல்வ வரியொன்றை விதிக்கவும், பரிசு, பரம்பரை சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்

- முறையான செலவு முகாமைத்துவம் மூலம் அரச செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல்

- முதன்மை வரவு செலவுத் திட்ட கையிருப்பு வரம்பிற்குள் பணவீக்கத்திற்கு ஏற்ப, ஊதியங்கள், ஓய்வூதியங்களை ஒழுங்குபடுத்துதல்

- 2023 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்க மதிப்பிற்குள் குறைத்தல்

- பணம் அச்சிடுவதை  படிப்படியாகக் குறைத்து, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய, கடன் பெற்றுக்கொள்ளாமல் வருமானத்தை அதிகரித்தல்

- அந்நிய செலாவணி, கட்டுப்பாடுகள், விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அந்நியச் செலாவணி சந்தையின் செயற்பாடுகள், சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க அனுமதித்தல்

- தீர்மானிக்கப்பட்ட இலக்குகளுக்கமைய, மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க வெளிநாட்டு நாணயத்தை கொள்வனவு செய்தல்
 
நல்லாட்சி தொடர்பாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

- உள்ளூர் நிபுணர்களின் கருத்துகளை உள்வாங்கி, அரசாங்கத்தின் பலவீனங்கள் குறித்த  IMF அறிக்கையை  தயாரித்தல்

- ஊழலைத் தடுப்பது தொடர்பாக அரசு, நிறுவன கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய  வாய்ப்பை ஏற்படுத்துதல்

- ஐ.நா சாசனத்தின் பிரகாரம்,  ஊழல் எதிர்ப்பு சட்டங்களை வகுத்தல்

- இழந்த சொத்துகளை மீட்பதற்கான ஏற்பாடுகளை 2024 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சட்டக் கட்டமைப்பில் உள்வாங்குதல்

- புதிய அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை உருவாக்குதல்

- சலுகை வரி அடிப்படையில், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றவர்களை  பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்துதல்

- பாரியளவிலான  பொது கொள்முதல் ஒப்பந்தங்களின் விவரங்களை பகிரங்கப்படுத்துதல்