உடனடியாக 333Mn டொலர் கடன் வழங்க முடியும்

இலங்கைக்கு உடனடியாக 333 மில்லியன் டொலர் கடன் வழங்க முடியும்: IMF தெரிவிப்பு

by Bella Dalima 21-03-2023 | 2:38 PM

Colombo (News 1st) இலங்கைக்கான கடன் உதவிக்கு நிறைவேற்றுக்குழு அனுமதியளித்துள்ள நிலையில், உடனடியாக 333 மில்லியன் டொலர் கடனை வழங்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள திட்டத்தின் கீழ், 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு நேற்று (20) அங்கீகாரம் வழங்கியது.

இலங்கையின் பேரண்டப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல், கடன் மீளளிக்கும் நிலையை உறுதிப்படுத்துதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட  வறிய மக்கள் மீதான சுமையைக் குறைத்தல், நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பிற்கான இயலுமையை வலுப்படுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் இலக்குகளாகும்.

இலங்கைக்கான கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வழங்கியுள்ள அங்கீகாரமானது, ஏனைய அபிவிருத்தி பங்காளர்களிடமிருந்து நிதியியல் ஒத்துழைப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

நிறைவேற்றுக்குழுவின் தீர்மானத்தினையடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலீனா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் நீடித்த கடன் திட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கும் நிறுவன மற்றும் ஆட்சி முறையில் ஆழமான சீர்திருத்தங்கள் அவசியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிலுள்ள ஏழைகளையும் பாதுகாத்துக்கொண்டு, நிதியியல் மற்றும் கடன் மீளளிப்பு இயலுமையை உறுதிப்படுத்த தற்போது நடைமுறையிலுள்ள முன்னேற்றகரமான வரி சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும் கிரிஸ்டலீனா ஜோர்ஜீவா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களைத் திருத்துதல் உள்ளிட்ட ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்