நீல வர்ணங்களின் மோதலை வென்றது ரோயல்

36 ஆவது தடவையாக நீல வர்ணங்களின் மோதலை வென்ற ரோயல்

by Rajalingam Thrisanno 18-03-2023 | 3:51 PM

கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணிக்கு எதிரான 144 ஆவது நீல வர்ணங்களின் மோதலை கொழும்பு ரோயல் கல்லூரி அணி 180 ஓட்டங்களால் வென்றது. 

இது நீல வர்ணங்களின் மோதலை ரோயல் கல்லூரி அணி வெற்றிகொண்ட 36 ஆவது சந்தர்ப்பமாகும். 

1879 ஆம் ஆண்டு ஆரம்பமான நீல வர்ணங்களின் மோதல் உலகளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் பழைமை வாய்ந்த கிரிக்கெட் போட்டியாக திகழ்கின்றது. 

இவ்வருட போட்டி கொழும்பு SSC மைதானத்தில் மார்ச் 16 ஆம் திகதி ஆரம்பமானதுடன், முதல் இன்னிங்ஸில் ரோயல் கல்லூரி அணி 8 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்களைக் குவித்தது. 

டசிஸ் மஞ்சநாயக்க 137 ஓட்டங்களையும் ரமிரு பெரேரா 128 ஓட்டங்களையும் குவித்தனர். 

பந்துவீச்சில் ஆகாஷ் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் கவிந்து டயஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடிய தோமஸ் கல்லூரி அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சேனாதி புலங்குலம 40 ஓட்டங்களையும் மஹித் பெரேரா 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றார். 

புலான் வீரதுங்க 3 விக்கெட்டுகளையும், ரனுக மல்லவாராச்சி, சந்தேஷ் ராமநாயக்க, சினெத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

173 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் நாளான நேற்று (17) இன்னிங்ஸை ஆரம்பித்த ரோயல் கல்லூரி அணி அதிரடியாக 26 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை விளாசியது. 

டசிஸ் மஞ்சநாயக்க 57 ஓட்டங்களையும் ரமிரு பெரேரா 46 ஓட்டங்களையும் பெற்றனர். 

ஆகாஷ் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அந்த வகையில், இறுதி நாளான இன்று (18) புனித தோமஸ் கல்லூரி அணியின் வெற்றி இலக்கு 341 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த இலக்கை  நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தோமஸ் கல்லூரி அணி வீரர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடிக்குள்ளாகினர். 

முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் 7 ஆம் இலக்க வீரராகக் களமிறங்கிய செனெஸ் ஹெட்டிஆரச்சி 46 ஓட்டங்களைப் பெற்றார். 

எனினும், அவரால் தோல்வியை சற்று தாமதிக்கச் செய்ய மாத்திரமே முடிந்தது. 

தோமஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 161 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது. 

சினெத் ஜயவர்தன, நெத்வின் தர்மரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரனுக மல்லவாராச்சி, புலான் வீரதுங்க, சந்தெஷ் ராமநாயக்க, டசிஸ் மஞ்சநாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டனர். 

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று மதிய போசன இடைவேளையின் பின்னர் போட்டி முடிவுக்கு வந்தது.