லிஸ்டீரியா தொற்று பரவும் அபாயம் இல்லை

இரத்தினபுரியில் லிஸ்டீரியா தொற்று பரவும் அபாயம் இல்லை: சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு

by Bella Dalima 17-03-2023 | 2:36 PM

Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தில் லிஸ்டீரியா ( Listeria - Listeriosis)தொற்று பரவும் அபாயம் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டியதில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பக்டீரியா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அண்மையில்  இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் உயிரிழந்ததையடுத்து, சுகாதார திணைக்களம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக  இரத்தினபுரி மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் லிஸ்டீரியா பக்டீரியா, அசுத்தமான உணவின் மூலம் உடலுக்குள்  பரவுவதாக  மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவரே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிவனொளிபாத மலையினை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களில் குறித்த பக்டீரியா பரவியுள்ளதா என பரிசோதிப்பதற்காக உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்டத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.