புக்கர் விருது பட்டியலில் தமிழரின் நாவல்

சர்வதேச புக்கர் விருதிற்கான பட்டியலில் தமிழ் எழுத்தாளரின் நாவல்

by Bella Dalima 16-03-2023 | 4:32 PM

Colombo (News 1st) சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பூக்குழி' நாவலின் ஆங்கில பிரதியான ‘Pyre’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் சிறந்த படைப்பாகக்  கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் (Booker) பரிசுப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

2023 ஆம்  ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த  தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில பிரதியான ‘Pyre’ புத்தகம் இந்த முறை புக்கர் பரிசுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

இந்த புத்தகத்தோடு வேறு 12 எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எழுத்தாளர் மெருமாள் முருகன் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம்பிடித்தவர். ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதரி, கங்கணம், மாதொருபாகன் உட்பட பல நாவல்களை அவர் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

திருச்செங்கோடு, நீர் விளையாட்டு, பீக்கதைகள் உட்பட பல்வேறு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார். 

மேலும் கவிதை தொகுப்பு , மொழிபெயர்ப்பு என்று பல்வேறு  செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான பூக்குழி நாவல் அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் Pyre என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தற்போது இந்த பிரதி புக்கர் பரிசுப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

சர்வதேச புக்கர் விருது வெற்றியாளர் லண்டனில் எதிர்வரும் மே 23 ஆம் திகதி அறிவிக்கப்படுவார். 

முன்னதாக, கடந்த ஆண்டு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சர்வதேச புக்கர் விருதை வென்ற முதல் இந்திய எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலப்பு திருமணத்தையும் அறிவில் பின்தங்கிய ஒரு சமூகம் அதனை எதிர்கொள்ளும் விதத்தையும் அதன் விளைவாக ஊர்கூடி நடத்தும் ஆணவக்கொலையையும் வட்டார வழக்கில் விறுவிறுப்பான நடையில் 'பூக்குழி' விபரிக்கிறது.