.webp)
Colombo (News 1st) கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கு எதிரான நீல வர்ணங்களின் மோதலில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் ரோயல் கல்லூரி அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 326 ஓட்டங்களை குவித்தது.
நீல வர்ணங்களின் மோதல் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறுகின்றது.
144 ஆவது ஆண்டாக நடைபெறும் இவ்வருட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் கல்லூரி அணி 64 ஓட்டங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாற்றமடைந்தது.
எனினும், அணித்தலைவர் தசித் மஞ்சநாயக்கவும் ரமிரு பெரேராவும் பொறுப்புடன் அணிக்காக ஓட்டங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக 228 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரப்படுத்தினர்.
தசித் மஞ்சநாயக்க சதம் கடந்த நிலையில் 137 ஓட்டங்களை பெற்றார்.
ரமிரு பெரேரா சதம் விளாசிய நிலையில் 128 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் ஆகாஷ் பெர்னாண்டோ 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ளது.