.webp)
Colombo (News 1st) வரி, வங்கி வட்டி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று (15) ஈடுபட்டுள்ளன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேனவிற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதமொன்றை அடிப்படையாகக் கொண்டு, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில தொழிற்சங்கங்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பை நாளை (16) காலை 8 மணிக்கு தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளன.
எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலையில், தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என மேலும் சில தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
உழைக்கும்போது செலுத்த வேண்டிய வரிக்கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த 47 சங்கங்கள் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று பங்கேற்றன.
எனினும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதமொன்றை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நாளை காலை 8 மணிக்கு பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைய, உத்தேச வரித்திருத்த யோசனைகள் தொடர்பிலான விடயங்களை சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்க நேரிட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கியதன் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற முதலாவது மீளாய்வின் போதே சர்வதேச நாணய நிதியம் இந்த யோசனைகளை பரிசீலிக்கவுள்ளது.
பொதுவாக கடன் வசதி வழங்கப்பட்டதன் பின்னர் முதலாவது மீளாய்வு சுமார் 6 மாதங்களுக்கு பின்னரே மேற்கொள்ளப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை மார்ச் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் அடுத்து வருகின்ற சில மாதங்களில் முன்னெடுக்கும் மீளாய்வின் போது, குறித்த யோசனைகளை முன்வைப்பதே பொருத்தமானது என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேனேவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , ஏனைய தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள விடயங்களை கருத்திற்கொண்டு பணிப்பகிஷ்கரிப்பை நாளை காலை 8 மணிக்கு முடிவிற்கு கொண்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இலங்கை வங்கி ஊழியர் சங்கமும் இன்று அறிவித்தன.
இதனிடையே, ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்ற துறைமுக தொழிற்சங்கங்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் மோட்டார் சைக்கிள் பேரணியொன்றை முன்னெடுக்க முயற்சித்தபோது கடற்படையினர் அதனை தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
துறைமுக ஊழியர்கள், கடற்படையினரின் இடையூறுகளுக்கு மத்தியிலும் துறைமுகத்திற்குள் பிரவேசித்தனர். பின்னர் ஊழியர்களுக்கும் துறைமுக நிர்வாகத்தினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
துறைமுக தலைவரும் மேலும் சில உத்தியோகத்தர்களும் வருகை தந்து, துறைமுக ஊழியர்களை கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு முயற்சித்ததாக துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகானகே கூறினார்.
துறைமுக ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்தனர்.
நாளை காலை 7 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பை முடிவிற்குக் கொண்டுவருவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச, அரச தனியார் கூட்டு நிறுவன தொழிற்சங்க ஒன்றியம் பொரளை சந்தியில் இன்று முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டது.
வங்கிக் கடன் வட்டி வீதத்தை குறைத்தல், 20,000 ரூபா வாழ்கைச் செலவு கொடுப்பனவை வழங்குதல், மின்சாரக் கட்டணத்தை குறைத்தல், சம்பள , ஓய்வூதிய குறைப்பை உடன் நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இதேவேளை, ஆசிரியர்கள் - அதிபர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பினால் அரச பாடசாலைகளில் நாளாந்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
களுத்துறையில் அதிபர்-ஆசிரியர்கள் இன்று முன்னெடுத்த பேரணிக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹங்வெல்ல , கண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிபர்களும் ஆசிரியர்களும் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர் .
திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், அநுராதபுரம், ஹட்டன், கண்டி, மாத்தறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கையால் கல்வி செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ். நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள அதிகரிப்பைக் கோரியும், வரி அறவீட்டினை நிறுத்துமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் வவுனியாவில் ஆர்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை அடைந்து, அங்கிருந்து வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையம் வரை சென்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு - காந்தி பூங்காவிலிருந்து மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்கா வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
நுவரெலியா - ராகலையிலும் அதிபர், ஆசிரியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பளை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் ஆசிரியர், அதிபர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளையிலுள்ள அதிபர், ஆசிரியர்கள், ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கெதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் ஆரம்பமாகி, மாத்தளை வலயக்கல்வி பணிமனை முன்றல் வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கண்டி - வத்தேகம வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வத்தேகம தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளியாப்பிட்டியவிலுள்ள ஆசிரியர் , அதிபர்களின் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளியாப்பிட்டிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீர்கொழும்பிலும் அதிபர்கள் - ஆசிரியர்கள் கொப்பரா சந்தியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் ஏழாவது நாளாகவும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டது.
கல்வி சாரா ஊழியர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கினர்.
பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவினர் நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று பகல் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள் இணைந்து அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் வாழ்க்கைச்செலவு அதிரகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தினரும் அரசாங்கத்தின் அசாதாரணமான வரிக்கொள்கை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விசேட வைத்தியர்கள், பல் வைத்தியர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் இன்று முடங்கின.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரமே இன்று இயங்கியது.
கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களின் வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ரயில்வே ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதன் பின்புலத்தில், லொக்கோமோட்டிவ் ரயில் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றாலும் இன்று காலை 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார்.
பெலியத்த, காலி, அவிசாவளை, கண்டி, ரம்புக்கனை, அளுத்கம, மாகோ ஆகிய பகுதிகளில் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இன்று ரயில்களுக்கு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்து சபையின் 8 தொழிற்சங்கங்களில் 7 தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு சமுகமளித்திருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கக் கூட்டணியினரும் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று இணைந்து கொண்டனர். இதன் காரணமாக தபால் நிலையங்களின் நடவடிக்ககைகள் பாதிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அரச வங்கிகளிலும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இடம்பெற்றது. ஒரு சில வங்கிக் கிளைகள் இன்று திறக்கப்பட்டிருந்ததுடன், சில வங்கிகள் இயங்கவில்லை.
நீர் வழங்கல் ஊழியர்கள் நீர்ப் பம்பி நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மாத்திரமே இன்று முன்னெடுத்தனர்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு இணையாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு இரத்மலானையில் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டது.
இரத்மலானை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியினால் காலி வீதியின் ஒருவழித் தடத்தின் ஊடான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
புத்தளம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களும் தமது அலுவலகத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பணிப்பகிஷ்கரிப்பிற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்களும் ஒத்துழைப்பை வழங்கினர்.