சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவிற்கு பிணை

by Bella Dalima 15-03-2023 | 6:51 PM

Colombo (News 1st) 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி, கடும் நிபந்தனைகளின் அடிப்படையில்  பாத்திமா ஹாதியாவிற்கு பிணை வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வழக்கின் பிரதிவாதியான பாத்திமா ஹாதியாவும், பிணைதாரர்களும் வௌிநாடு செல்ல தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாத்திமா ஹாதியா கடந்த நான்கு வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.