ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலா வலயங்களில் புதிய விளம்பர திட்டங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை

by Staff Writer 13-03-2023 | 5:19 PM

Colombo (News 1st) ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலித் நசீர் சுலைமான் அல் அமெரி(Khaled Nasser Sulaiman AlAmeri), கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து கலந்துரையாடினார்.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நிரந்தர வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ளும் முறைமையொன்றை ஏற்படுத்துமாறும் தூதுவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலா வலயங்களில் புதிய விளம்பரத் திட்டங்களை முன்னெடுக்குமாறும் தூதுவர், ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிலும் உலகிலும் பல பெறுமதிமிக்க கடற்பரப்புகளில் 10 மில்லியன் சதுப்புநில செடிகளை நாட்டும் விசேட வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண கடற்கரையும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் கூறியுள்ளார்.