நிதி அமைச்சிடமிருந்து பதில் கிடைக்கவில்லை

நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை - அரச அச்சகம்

by Staff Writer 12-03-2023 | 2:24 PM

Colombo (News 1st) இதுவரை நிதி கிடைக்காத காரணத்தினால் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளில் 75 வீத வாக்குச்சீட்டுகளே இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணத்தை உரிய முறையில் வழங்குமாறு கோரி நிதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் அரச அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிதி உரிய நேரத்தில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர், வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க முடியாது எனவும் அரச அச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய நேரத்தில் நிதி கிடைத்தால் 30 நாட்களுக்குள் வாக்குச்சீட்டுகள் முழுவதையும் அச்சடித்து வழங்க முடியும் என அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்குச்சீட்டு அச்சிடும் சரியான திகதியை 03 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கும் பட்சத்திலேயே, பாதுகாப்பினை வழங்க முடியும் என அரச அச்சகத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் 533 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அரச அச்சகம் கூறியுள்ளது.

எனினும், 40 மில்லியன் ரூபாவே இதுவரை வழங்கப்பட்டுள்ளது.