ரயிலில் சிசு மீட்பு: பெற்றோருக்கு விளக்கமறியல்

சிசுவை ரயிலில் கைவிட்டுச்சென்ற பெற்றோருக்கு விளக்கமறியல்

by Staff Writer 12-03-2023 | 7:07 PM

Colombo (News 1st) ரயில் கழிப்பறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் பெற்றோர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இருவரும் இன்று(12) ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

25 வயதான தாய் பண்டாரவளையிலும் 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் நேற்று(11) கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம்(10) மாலை சிசுவொன்று மீட்கப்பட்டது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாயிடம் விசாரணை நடத்துவது குறித்து கவனம் செலுத்தாமல் அவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை தவிர சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் அவர் செயற்பட தவறியுள்ளதாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.