தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 12-03-2023 | 4:44 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சூழலில் தேர்தலுக்கான பணத்தை விடுவிப்பதற்கு தமது அனுமதி மாத்திரம் போதாது என நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான பணம் வழங்கப்படாததன் காரணமாக கடந்த 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.