ஒன்றரை வயது சிறுமியை சித்திரவதை செய்த தந்தை கைது

பணத்திற்காக ஒன்றரை வயது சிறுமியை சித்திரவதை செய்த தந்தை கைது

by Bella Dalima 10-03-2023 | 5:15 PM

Colombo (News 1st) ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி முன்னதாக தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். 

சிறுமி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ காட்சிகளை பாட்டிக்கு பலமுறை அனுப்பி வைத்துள்ளார்.

எனினும், அவர் சிறுமியை தடி மற்றும் கைகளால் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்து வௌிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி, அவ்வப்போது பணம் கேட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இது குறித்து சிறுமியின் தாய், தனது தாயாரான சிறுமியின் பாட்டிக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இதனையடுத்து, பக்கமுன பொலிஸார் தந்தையை நேற்று (09) கைது செய்துள்ளனர்.

30 வயதான குறித்த நபர் இன்று ஹிங்குராகொட  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.