மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக்கவிற்கு எதிர்ப்பு

ஜோசப் முகாமிற்கு தலைவராக இருந்தவர் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்பதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு

by Bella Dalima 10-03-2023 | 6:51 PM

Colombo (News 1st) ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கை குழுவில்  மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக்க குலத்துங்க உள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக  மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக்க குலத்துங்க கலந்துகொண்டுள்ளார். 

பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான Elliot Colburn இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின்  மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு  கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

மோசமான சித்திரவதைகளுக்கும் பாலியல் வன்செயல்களுக்கும் பெயர்பெற்ற 'ஜோசப் முகாம்' என்றழைக்கப்பட்ட  வவுனியாவிலிருந்த பாதுகாப்புப்  படை முகாமிற்கு 2016-17ஆம் ஆண்டுகளில் குறித்த மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக்க குலத்துங்க  தலைவராக இருந்தமை தொடர்பில் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த 2016 இல், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவின் (UNCAT) விசாரணையில், இலங்கையில் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சிசிர மெண்டிஸ்  கேள்விக்குட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.