.webp)
Colombo (News 1st) பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்த புத்திக பத்திரன, அடுத்த உயிர் பலி பல்கலைக்கழகங்களுக்குள் பதிவாகுமானால் அது முழு நாட்டிற்குமான பேரிழப்பாகும் என கூறினார்.
மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அமைச்சு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.