பெண்களின்றி திறக்கப்பட்ட ஆப்கான் பல்கலைக்கழகங்கள்

பெண்களின்றி மீள திறக்கப்பட்ட ஆப்கான் பல்கலைக்கழகங்கள்

by Chandrasekaram Chandravadani 08-03-2023 | 11:24 AM

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் வழங்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறையின் பின்னர் பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்பட்டுள்ளன. 

எனினும், அந்நாட்டு இளம் பெண்களுக்கு இதுவொரு வலி மிகுந்த நாளாகும். 

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கான உலகம் குறுகியதாக அமைகின்றது.

தலிபான் அரசாங்கம் 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது.

அதுவரையில் தமது கல்வியை பெற்றுக்கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த பெண் மாணவர்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு உயர் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

''தற்போது நான் ஒன்றுமில்லாதவள்'' என விஞ்ஞான பீடத்தின் நான்காம் வருட மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

''பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. தொழில் செய்ய வேண்டும், எனது நாட்டு மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆனால் தற்போது என்னால் அவற்றை செய்ய முடியாது போயுள்ளது,''

என குறித்த மாணவி தனது மனக்கவலையை ஊடகமொன்றுக்கு பகிர்ந்துள்ளார்.

பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் சித்தி எய்திய Atefa என்ற மாணவி,  இணையத்தள உருவாக்குனராக வேண்டுமென்ற தனது கனவு தற்போது வீணாகிப்போய்விட்டதாகக் கூறியுள்ளார். 

நாம் ஹிஜாப் அணிய வேண்டுமென்று கூறுவார்களால் அது தொடர்பில் மகிழ்ச்சி அடைகின்றோம், தனித்தனி வகுப்பறைகளை கொண்டிருக்க வேண்டும் என்றால் அதையும் சந்தோசமாக ஏற்கின்றோம். ஆனால் எமக்கு கல்வி பயில அனுமதி வழங்க வேண்டும்,''

என காபூல் பல்கலைக்கழகத்தின் நாடகக்கல்வியின் இரண்டாம் வருட மாணவி ஒருவர் கூறியுள்ளார். 

இது இவ்வாறிருக்க, வகுப்பறைக்கு செல்வதென்பது மரண வீட்டிற்கு செல்வது போன்றுள்ளதென மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

சத்தமாக கதைத்தால் தலிபான்கள் கைது செய்து விடுவார்களோ என அச்சமடைவதாக அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களால் ஆண்களுடன் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது, எம்மோடு தோளோடு தோளாக பெண்களும் பணியாற்ற வேண்டும் என பர்வான் மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவர் கவலை வௌியிட்டுள்ளார்.

பெண்களுக்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்டதாக தெரியவில்லை, நாமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே உணர்கிறோம் என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, பெண்களுக்கு பல வகையிலான தடைகள் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று (08) உலகளாவிய ரீதியில் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

"பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்பது இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.